January 19, 2011

புத்தகக் கண்காட்சி அனுபவம்!

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்தேன். இது எனது முதல் அனுபவமாகும். இதற்கு முன்னர் நான் புத்தகக் கண்காட்சிகளுக்கு சென்றதில்லை. இந்த பதிப்பு என் புத்தகக் கண்காட்சி அனுபவத்தின் தொகுப்பாகும்.
Charles W. Eliot  சொன்னது போல, Books are the quietest and most constant of friends; they are the most accessible and wisest of counselors, and the most patient of teachers”. அங்கு சென்றதும் இந்த வரிகள் தான் என் மனதில் ஓடின. மற்றும் இக்காலத்திலும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் சற்றும் குறையவில்லை என்றும் தோன்றியது.
சென்னையில் புத்தகக் கண்காட்சி ஜனவரி 4ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இது சென்னையில் நடக்கும் 34வது பத்தகக் கண்காட்சியாகும். அங்கு நான் பத்து புத்தகங்கள் வாங்கினேன்! சந்தோஷம் தாங்க முடியவில்லை! என் கால்கள் தரையிலேயே இல்லை! அங்கு, எனக்கு ஒரு ஆச்சரியமும் காத்துக்கொண்டிருந்தது. என் மனதிற்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு. கி.ராஜநாராயணன் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கி. ரா என்றதும் கரிசல் காடு தான் நினைவிற்கு வருகிறது! இந்த சந்திப்பினை வாய்ப்புஎன்று சொல்வதை விட பேறுஎன்று சொன்னால் இன்னமும் பொருத்தமாக இருக்கும் என்றெண்ணுகிறேன். கி.ராஜநாராயணன் அவர்கள் எழுதிய புத்தகம் ஒன்று வாங்கவேண்டும் என்ற ஆவலுடன் அன்னம் அகரம்ஸ்டாலுக்கு (தமிழ் வார்த்தை தெரியவில்லை, மன்னிக்கவும்) சென்றேன். அங்குதேர்ந்தெடுத்த கதைகள்என்ற தலைப்பு கொண்ட கி.ரா-வின் சிறுகதை தொகுப்பு நூல் ஒன்றை வாங்கி, திரும்பிப் பார்த்தால்! கி.ராஜநாராயணன் அவர்கள்!! என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை!! கண்களை ஒரு முறைக்கு இரு முறை கசக்கிக்கொண்டு பார்த்தேன். அவரேதான், கி.ரா!!! எனக்கு தலை-கால் புரியவில்லை!! என்ன செய்வது என்று புரியாமல் ஒரு நிமிடம் விழித்தேன். சிறிது நேரம் என்னால் எதுவும் யோசிக்க முடியவில்லை! சட்என்று, நான் வாங்குவதற்குத் தேர்வுசெய்த அந்த புத்தகத்தில் அவரது கையொப்பத்தை வாங்கினேன். என்னுடன் அவரது ரசிகர்கள் பலர் அவரிடத்தில் கையொப்பம் வாங்கினார்கள். அங்கிருந்து நகர என் மனம் மறுத்துவிட்டது. எனினும் புத்தகங்கள் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஒரு புறம் என்னை நகர்த்திச்சென்றது. நான் ஒவ்வொரு ஸ்டாலாகக் கடந்தாலும் என் மனம் திரு. கி.ரா அவர்கள் அமர்ந்திருந்த அந்த ஸ்டாலிலேயே இருந்தது. இன்னொருமுறை அவரை பார்த்து அவரது ”கதவு” சிறுகதை பற்றியும், ”கோமதி” சிறுகதை பற்றியும் அவரிடம் பேசவேண்டும் போல் இருந்தது. ஏனென்றால் அவ்விரு கதைகளும் என்னை மிகவும் பாதித்தவை! பின்னர், என் அப்பவுக்கு பரிசாக யவன ராணிபுத்தகம் வாங்கலாம் என்றெண்ணி, வாங்கப் போகும் சாக்கில் அவரது தரிசனத்தை மறுமுறை பெற்ற திருப்தியுடன் வீட்டிற்கு கிளம்பினேன். 
நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இதோ:

  • விருப்பமில்லாத திருப்பங்கள்- சுஜாதா
  • ஆஸ்டின் இல்லம்- சுஜாதா
  • இரயில் புன்னகை- சுஜாதா
  • நில் கவனி தாக்கு- சுஜாதா
  • ஆயிரதில் இருவர்- சுஜாதா
  • தீண்டும் இன்பம்- சுஜாதா
  • கரையெல்லாம் செண்பகப்பூ- சுஜாதா
  • தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (2ஆம் பகுதி)- சுஜாதா

நான் ஒரு சுஜாதா பைத்தியம்! :-D

  • தேர்ந்தெடுத்த கதைகள்- திரு. கி.ரா
  • பிரசாதம்- சுந்தர ராமசாமி

இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்துக்கொண்டுதான் அடுத்த வேட்டையைத் தொடங்கவேண்டும்!

"The greatest gift is the passion for reading.
It is cheap, it consoles, it distracts, it excites,
it gives you knowledge of the world and experience of a wide kind.
It is a moral illumination."
- Elizabeth Hardwick