August 28, 2010

மைப் பேனா!

நினைவிருக்கிறதா? நம் சிறு வயதுகளில், நம் வீட்டுப்பெரியவர்கள் உபயோகப்படுத்த நாம் கண்ட அதே மைப்பேனாக்கள் தான்.

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் மைப்பேனாவினால் எழுதுவதைப் பார்த்தேன். இந்த காலத்திலும் ஒருவர் மைப்பேனவினால் எழுதுவது மிகமிக அரிது! என் சிறு வயதுகளில், பள்ளியில் மைப்பேனாவினைத்தான் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஏனெனில் மைப்பேனாவினைப் பயன்படுத்துவதன் மூலம் கையெழுத்து சீராக அமையும் என்பது எங்கள் ஆசிரியர்களின் கருத்து. எங்கள் நான்காம் வகுப்பின்போது தான் பள்ளிகளில் பேனாக்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு. சிறு வயதுகளில் எனக்கு பேனக்களின் மீது ஒரு வித மோகம் என்றே சொல்லலாம். கையில் சேரும் அல்லது சேர்த்து வைத்த காசுக்கெல்லாம் பேனாக்களாக வாங்கிக்குவித்த காலமது. அம்மாவுக்குத் தெரிந்து பாதி, தெரியாமல் பாதி. அதுவும் பேனாக்களை கடைகளிலிருந்து தேர்வுசெய்து வாங்கிய உடனே அது எழுத எடுத்து செல்லப்படாது. அதனை “அக்கு-வேறு ஆணி-வேறாகப்” பிரித்து, அதன் பகுதிகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்த பின்னரே அது பள்ளிக்கு எடுத்து செல்லப்படும்.
என் பத்தாம் வகுப்பு முடிந்ததும் நாங்கள் வீடு மாற்றலானோம். அப்பொழுதுதான் என் பொக்கிஷங்களைக் கடைசியாகப் பார்த்தாக ஞாபகம். ஒரு சிறு பெட்டி நிறைய மைப்பேனாக்கள்!

இவைகளை என்றுமே என் நெஞ்சகம் மறப்பதில்லை. இன்றைக்கு நினைத்தாலும் பசுமையாய் என் எண்ணங்களில் மணம்வீசிக்கொண்டிருக்கும் என் பள்ளி கால நினைவுகளில் இதுவும் ஒன்று.

1 comment:

  1. Very nostalgic :) And great writing :) Especially the ending - manam veesikkondirukkum - i could actually smell the ink :) I have very fond memories of writing with ink pens also.

    ReplyDelete