October 25, 2010

கற்றல்

ஒரு பள்ளி அல்லது கல்லூரியில், ஒரு வகுப்பில் பயிலும் அத்துணை மாணவர்களுக்குமே முதல் மதிப்பெண் வந்துவிடுவதில்லை. ஒரே பள்ளியில் அல்லது கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுமே சிறந்தவர்களாக ஆவதும் இல்லை. பள்ளி, கல்லூரி சென்று பயிலாதவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேறாமல் போனதும் இல்லை. காரணம், அவர்கள் அனைவரும் வெவ்வேறு திறம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் ஒரு மாணவனை அவனது மதிப்பெண்களை வைத்து பரிசீலிப்பது சரியானதாக இராது என்பது என் கருத்தாகும்.
ஒரு வகுப்பில், ஒரு பாடம் நடத்தும்போது, அப்பாடத்தை முழுமையாகப் புரிந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். சிலர், எந்த ஒரு விஷயமானாலும் அதனை ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில் ஆர்வம் மிக்கவராக இருப்பார்கள். மற்றும் சிலர் நடைமுறை வாழ்க்கைக்கு பயனுறும் வண்ணம் தாங்கள் கற்ற விஷயத்தை புரிந்து கொள்ள முனைவார்கள். பெரும்பாலானோர், மதிப்பெண்கள் ஈட்டவேண்டும் என்ற நோக்கத்துடன், ஆசிரியர்கள் சொல்வதைத்தவிர சற்றும் கூடுதலாக பயிலமாட்டார்கள். மேலும் சிலர் எண்ணங்களை எங்கோ ஓடவிட்டு, எதிலும் நாட்டமில்லாமல் ஒரு கனவு உலகத்திலேயே கட்டுண்டு கிடப்பார்கள். இப்படி ஒவ்வொருவரின் மன அமைப்பில் வேறுபாடு இருப்பின் அது அவர்களின் புரிதலையும் பாதிக்கின்றது. இவ்வாறு ஒவ்வொருவரின் புரிதல் விகிதமும் மாறுபடுகிறது. ஒரே வகுப்பு சூழலில் உருவாக்கப்படுகின்ற மாணவர் குழுவிலேயே புரிதல் விகிதத்தில் இத்துணை வேறுபாடு இருப்பின், எண்ணிப்பாருங்கள், பல குழுக்கள் நிரைந்த இந்த உலகத்தில்?
நிழற்படம் எடுக்கையில் Angles என்று சொல்லப்படும் கோணத்தில் வேறுபாடு வரின் அந்த புகைப்படமே மாறிவிடுவது போல, வாழ்க்கையை நாம் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது நமது புரிதலிலும் வேறுபாடுகள் தோன்றுகின்றன. மனிதனுக்கு மனிதன் புரிதல் மாறுபடுவது ஒரு பக்கம் இருக்க, தனிமனிதனின் புரிதலிலேயே மாறுபாடுகள் தோன்றுகின்றன.
ஒரு திறந்த புத்தகம் இருக்கிறது, அதனைப் படிக்கும் ஒவ்வொருவரின் புரிதலும் வேறுபடுகிறது. ஒரே புத்தகத்தை ஒரு தனி மனிதன் வெவ்வேறு தருணங்களில் படிக்கும் பொழுது அவனது புரிதல் வேறுபடுகின்றது. புத்தகம் என்னவோ மாறுபடுவது இல்லை, ஆனால் புரிதல் மாறுபடுகிறது. இங்கு புரிதலே கல்வியாகிறது. இவ்வாறே கற்றல், அறிவு போன்றவை ஒருவருக்கொருவர் மாறுபட்டே நிற்கிறது. 
கற்றல் என்பது ஒரு பொதுவான விஷயம் அல்ல. அது ஒவ்வொரு தனி மனிதனைச் சார்ந்தே அமைகிறது. கற்கும் ஆர்வம் மிக்கவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் பாடமாக அமைகிறது. கற்றல் பற்றிய மாறுபட்ட கோணம் உடையவர்களுக்கு அது வகுப்பறையின் சிலமணி நேரங்களுக்குள் அடங்கும் விஷயமாகத் தோன்றுகிறது.
ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கை நமக்கு கற்பிக்கும் பாடத்தினைக் கசடறக் கற்போம். வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் பாடமே!

No comments:

Post a Comment